மேட்டூர்:

கா்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாக கா்நாடக காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையினால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது

காவிரியில் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, சுற்றுலாபயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க கடந்த 5 நாட்களாக மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.

தற்போது நாடக காவிரி நீா்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், காவிரியில் திறக்கப்படும் தண்ணீரையும் கர்நாடக அரசு குறைத்து உள்ளது. இதன் காரணமாக தற்போது, காவிரி ஆற்றில் நீா்வரத்தானது நொடிக்கு 7,500 கன அடிதான் வந்துகொண்டிருக்கிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மணி வண்ணன், பென்னாகரம் வட்டாச்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் சிவன் மற்றும் ஒகேனக்கல் போலிஸாா் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க வாய்ப்புள்ளதா என கோத்திக்கல் பரிசல்துறை பகுதியில் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத்தொடர்ந்து,  முதற்கட்டமாக கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் மேடு வரை சுமாா் 1கிலோ மீட்டா் தொலைவிற்கு பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.