மைசூரு

ர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு நீர் வரத்து  அதிகரித்துள்ளது

தற்போது கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 100.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 554 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5,509 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணையின் நீர்மட்டம் 2,284 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,281.32 அடியாக இருந்தது. இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் மொத்தம் வினாடிக்கு 4,554 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த இரு அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 3,463 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்த நிலையில் அது நேற்று வினாடிக்கு 4,554 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது.