சினிமா கலைக்காக என்பதெல்லாம் பொய் என்று புதுமுக இயக்குநர் அதிரடியாக ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசினார். அது பற்றிய விவரம்:
‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘மதுரை டூ தேனி – 2’. என்று இப்போது உருவாகி இருக்கிறது. போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் வெளியாகவுள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதையே கதை. இதை காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு சொல்கிறது இந்தப்படம்.
இப்படத்தின் ஊடக சந்திப்பு ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது.
விழாவில் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளவருமான எஸ்.பி.எஸ். குகன் பேசும் போது “இன்று ஏராளமாகப் படங்கள் எடுக்கப் படுகின்றன சிறுமுதலீட்டுப் படங்கள் நிறைய எடுக்கப் படுகின்றன. ஏராளமாகப் படங்கள் எடுக்கப் படுவதால் என்ன பயன்? எடுத்து வெளியிட முடியாமல் இருப்பதில் என்ன பெருமை?
சிறுப் படங்கள் எடுத்தால் வெளியிட திரையரங்குகள் கிடைப்பது இல்லை. போட்ட முதல் திரும்ப கிடைக்க எந்த உத்திரவாதமும் இல்லை. திரையரங்குகள் கேட்டால் கூட்டம் வருவதில்லை என்கிறார்கள். பெரிய படத்துக்கு மட்டுமே கூட்டம் வருகிறது என்கிறார்கள். அதனால்தான் பெரிய படங்கள் மட்டுமே வெளியிடுகிறோம் என்கிறார்கள்.. அவர்கள் தரப்பில் தவறில்லை.
சினிமா என்பது கலைக்காக அல்ல. கலைக்காகப் படமெடுக்கிறேன் என்பதெல்லாம் பொய். கலைக்காக இலவசமாகப்படம் இயக்குவார்களா? இலவசமாக நடிப்பார்களா? படம் தயாரிப்பார்களா? கலைக்காக ப்படமெடுக்கிறேன் என்று பேச்சுக்காக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சினிமா முழுக்க முழுக்க வியாபாரம்தான்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் 20 லட்சரூபாயில் ஒரு கார் வாங்கப் போகிறீர்கள்.அங்கே 10 லட்சரூபாயில் கார் இருக்கிறது , 5 லட்சரூபாயில் கார் இருக்கிறது நீங்கள் கடைசியில் 5 லட்சரூபாய் காரை வாங்குகிறீர்கள் . உங்கள் கையில் 20 லட்ச ரூபாய் பணமும் இருக்கிறது அப்போது ஷோரூம் முதலாளி கேட்கிறார் நீங்கள் 20 லட்சரூபாய் கார் வாங்கத்தானே வந்தீர்கள்.வாங்கியும் விட்டீர்கள் அந்த 20 லட்சரூபாயை கொடுத்து விட்டு போங்கள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
அப்படித்தான் சினிமாவிலும் பெரிய பட்ஜெட் படம் பார்க்க வருபவர்கள் அதே கட்டணத்தில் சின்ன பட்ஜெட் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பது எப்படிச் சரியாகும்?
படம் பார்ப்பவன் கேட்கிறான் ஏன்யா 5 லட்ச ரூபாயில் எடுத்த படத்துக்கும் 80 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட்டா? 50 கோடி ரூபாயில் எடுத்த படத்துக்கும் அதே 80 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட்டா?-
என்கிறான் அது நியாயமான கேள்விதானே?
பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிங்கள் தயாரிப்புச் செலவுக்கு ஏற்ற கட்டணம் நிர்ணயிங்கள் என்கிறோம்.
வெளியிட திரையரங்குகள் இல்லை பார்க்க ஆளில்லை. அதையும் தாண்டி வெளியிட்டால் 10 பேர், 20 பேர் வந்தால் பார்க்கிங் வருமான மில்லை ,கேட்டீன் வருமான மில்லை நாங்கள் என்ன செய்வது? என்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதானே?
19 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்!
அதனால்தான் தயாரிப்புச் செலவுக்கு ஏற்ற படியான இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி, டிக்கெட் போடும் திட்டத்தை கொண்டு வருகிறோம். தமிழ்சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப்பெரிய முயற்சியை நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தின் மூலமாக செய்யவிருக்கிறது.
வருகிற மே மாதம் வெளியாகவிருக்கும் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம். தொடர்ந்து தமிழில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களை இதே கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.எங்களை மாதிரி சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவரவும் காப்பாற்றப் படவும் இது உதவும்.
அதன்படி திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து வெளியிட இருக்கிறோம். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் படி ஒரு படத்துக்கு 19 ரூபாய்தான் கட்டணம் வரும். ஊருக்குப் போகும் போது காத்திருக்கும் சமயத்தில் கூட ஒரு படம் பார்த்து விட்டு வந்து விடுவார்கள் .19 ரூபாய்தானே கட்டணம்.? திருட்டு விசிடியை விட குறைந்த கட்டணம் என்றால் பார்க்க வருவார்கள். மக்களைத் தியேட்டரை நோக்கி வரவழைக்கும் திட்டம் இது. நல்ல படங்கள் ஓடாத நிலை மாறும் நல்ல டீ குடிக்கவே 15 ரூபாய் ஆகும் 19 ரூபாய் படம் என்றால் பார்ப்பான்.
திரையரங்குகள் உருவானதே படம் பார்க்கத்தான் டிவி சீரியல் எல்லாம் படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்து விடாது. அது படத்துக்கு சமமாகுமா?
சூப்பர் ஹிட் டான படத்தைக் கூட உருப்படாத படம் என்று ஒருவன் சொல்வான் .ஆளாளுக்கு ரசனை வேறுபடும் தானே? முடிந்த அளவுக்கு தரமான படங்களை இப்படி வெளியிடுவோம். படம் பார்ப்பவர் விகிதம் கூட வேண்டும் 5 ஆயிரம் பேர் பார்ப்பது 50 ஆயிரமாக வேண்டும்.அது 5 லட்சமாக வேண்டும். இப்படிப்படம் பார்ப்பவர் விகிதம் கூட வேண்டும் 100 ரூபாய்க்கு 120 வியாபாரம் இருந்தால் கூடப்போதும்.
நான் சினிமாவில் பலதுறைகளில் பணியாற்றியவன். என் படத்தை வைத்துதான் சோதனை முயற்சி செய்கிறேன். லாபம் நஷ்டம் என்றால் எங்களுக்கு, வெற்றி பெற்றால் மற்றவர்களுக்கு உதவும் ” இவ்வாறு குகன் பேசினார்.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.