துறையூர்:

திருச்சி அருகே உள்ள துறையூர் அரசு மருத்துவமனையில்,  இறந்தவரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபிறகு, அந்த உடலை கோணி (சாக்கு) தைக்கும் ஊசி கொண்டு தைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதில் உடலை கோணி ஊசியால் தைப்பவர், மருத்துவமனையில் உள்ள துணிகளை சலவை செய்யும் சலவை தொழிலாளி என்பது பெரும் வேதனைக்குரியது.

கடந்த சில நாட்களுக்கு துறையூர் அருகே கிணற்றில் விழுந்து ஒருவர் இறந்துள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது  உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் முன்னிலையில்,  மருத்துவமனை பணியாளர், உடலை தைக்காமல், சலவைத் தொழிலாளி ஒருவர்  உடலைத் தைத்து வருகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்க்கும் பொதுமக்கள் இதுவரை வட மாநிலங்களில்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வந்தன. தற்போது தமிழகத்திலும் அரங்கேறி வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து புகார் வந்ததை தொடர்ந்து,  திருச்சி மருத்துவத்துறை இணை இயக்குநர் சம்ஷாத்பேகம், துறையூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.