நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அவருக்கு நெருங்கிய நண்பரான வைகோ அழைக்கப்பவில்லை. வரும் முப்பதாம் தேதி நடக்க இருக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன், கி.வீரமணி, டிடிவி தினகரன், தா.பாண்டியன், எல் .கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டிருக்கும் நிலையில், வைகோ கலந்துகொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது” என்று ஒரு பேச்சு அரசியல்வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.
முப்பதாம் தேதி வைகோ நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நடைபயணம் செல்கிறார். நடராஜனை, தனது நண்பர் நண்பர் என்று கொண்டாடியவர் வைகோ, ஆகவே அதற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்ச்சியை வைகோவையும் அழைத்து நடத்தியிருக்கலாமே என்றும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது.
இது குறித்து தஞ்சையில் நடராஜன் குடும்ப வட்டாரத்தில் விசாரித்தோம்.
“படத்திறப்பு என்பதும் சடங்குகள் நிறைந்தது. இறந்ததில் இருந்து 7 அல்லது 11ம் தேதி வைக்க வேண்டும். நடராஜன் இறந்ததில் இருந்து ஏழாம் நாளான 26ம் தேதி படத்திறப்பு நிகழ்ச்சியை வைத்துக்கொள்ள முதலில் தீர்மானித்தோம். அப்போது முதலில் நாங்கள் தகவல் சொன்னது வைகோவுக்குத்தான். அவரும் ஒப்புக்கொண்டார்.
ஆனால் தினகரனுக்கு தேர்தல் குறித்த வழக்கு 26ம் தேதி. ஆகவே அன்று நிகழ்ச்சியை வைக்க முடியாத நிலை. ஆகவே நடராஜன் இறந்து 11ம் நாளான மார்ச் 30ம் தேதி படத்திறப்பை வைத்தோம். இதையும் வைகோவிடம் முதலில் சொன்னோம்.
அவர் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அன்று நடைபயணம் செல்ல இருப்பதாக ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டதாக கூறினார். அதே நேரம் இன்று மாலை, தஞ்சையில் உள்ள நடராஜன் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்துகிறார்.
அதோடு, ஏப்ரல் 15ம் தேதி தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடராஜன் படத்தை வைகோதான் திறந்துவைக்கிறார்.” என்று விளக்கம் அளித்தார்கள்.
“தி.மு.க. சார்பில் எல்.கணேசன் பெயர் அழைப்பிதழில் இருக்கிறது. ம.தி.மு.க. சார்பாக எவரும் இல்லை என்று சிலர் கூறுகிறார்களே” என்றோம்.
“சொல்கிறவர்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒருவரது மரண நிகழ்வில் கூட தேவையற்ற பூசலை உருவாக்க நினைப்பவர்கள்தான் இது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்” என்று சொல்லி முடித்தார்கள் நடராஜன் குடும்ப தரப்பில்.