ஸ்ரீநகர்: கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி, காஷ்மீரின் பனிஹால் பகுதியில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வளையத்தின் மீது நிகழ்த்த முயன்று தோல்வியடைந்த கார் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி, அத்தாக்குதலுக்குப் பின்னால் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு இருப்பதை உறுதிசெய்துள்ளது.
இத்தாக்குதலை நடத்தினால், தமது இயக்கத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நடத்த முயன்ற தாக்குதலே இது என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா என்ற பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கவரப்பட்டு, இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
இந்த தோல்வியடைந்த தாக்குதல் சதித்திட்டம் குறித்து பிடிப்பட்ட தீவிரவாதிகளான ஹிலால் அகமது மண்டூ மற்றும் ஓவைஸ் ஆமீன், உமர் ஷாஃபி மற்றும் அகிப் ஷா, ஷாகித் வானி மற்றும் வாசிம் அகமது தர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விபரங்கள் தெரியவந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.