புதுடெல்லி: தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாக, அதானி குழுமத்திற்கு ரூ.8000 கோடி ஆதாயம் கிடைக்கும் வகையிலான தீர்ப்பை அளித்துவிட்டு விடைபெற்றுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி, அதானி குழுமத்திற்கு சாதகமாக, இவர் சார்ந்த அமர்வு அளித்த 7வது தீர்ப்பாகும் இது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்டுரையாளர்கள் அபிர் தாஸ்குப்தா, பரன்ஜோய் குஹா தாகுர்தா ஆகியோர் கூறியுள்ளதாவது; நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோரையும் உள்ளடக்கிய, அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, கடைசியாக இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இம்மாதம்(செப்டம்பர்) 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார் அருண் மிஷ்ரா. அதற்கு முன்னதாக, தனது கடைசிப் பரிசாக அதானி குழுமத்திற்காக இத்தீர்ப்பை அவர் அளித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தின் அரசுத்துறை மின்சார பகிர்மான நிறுவனங்களுடன், அதானி குழுமத்திற்கு இருந்த சச்சரவில், இந்த சாதக தீர்ப்பை அளித்துள்ளது அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு.
ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்திலுள்ள கவாயில், அதானி குழுமத்திற்கு சொந்தமான 1320 மெகாவாட் திறனுடைய தெர்மல் பவர் ஸ்டேஷன் உள்ளது. இதுதொடர்பான, ரூ.5000 கோடி மதிப்பிலான இழப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் ரூ.3000 கோடி மதிப்பிலான அபராதங்கள் மற்றும் வட்டித்தொகைகள் என்று மொத்தம் ரூ.8000 கோடி ஆதாயம் தரக்கூடிய சாதக தீர்ப்பை அதானி குழுமத்திற்காக அளித்துள்ளது அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு.
இந்த ரூ.8000 கோடியானது, ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் ஆஜ்மீர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த மின்சார நுகர்வோர்களின் தலையில் சுமையாக ஏற்றப்படவுள்ளது என்றுள்ளனர் அவர்கள்.