அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது.
மிகப்பெரிய வரிச் சலுகைகள் மற்றும் அதிக பாதுகாப்புச் செலவுகளை உள்ளடக்கிய கையெழுத்து வரி மற்றும் செலவு மசோதா பட்ஜெட், கடந்த மாதம் பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்டது, இப்போது செனட்டர்களால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த மசோதா அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் மற்றும் அமெரிக்கர்களை “நொறுக்கும்” கடனில் சிக்க வைக்கும் என்று உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் இந்த வார தொடக்கத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
வழக்கமாக எலான் மஸ்க் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடும் நிலையில், நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் அவர் டொனால்ட் டிரம்ப்-புக்கு ஆதரவாக செயல்பட துவங்கியதை அடுத்து எக்ஸ் பக்கத்தில் அவரது தத்து பித்துகளுக்கு அளவில்லாமல் போனது மட்டுமல்லாமல் அதற்கு ரசிகர்களும் அதிகரித்தனர்.
இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் அரசின் முக்கிய துறைக்கு தலைவராக எலான் மஸ்க்-கை நியமித்ததோடு ராணுவ ரகசியங்களையும் அறிந்துகொள்ளும் அளவுக்கு அவரது செல்வாக்கு அதிகரித்தது.
இதையடுத்து நரிக்கு நாட்டாமை கிடைத்த கதையாக அரசு ஊழியர்களை சகட்டுமேனிக்கு வீட்டுக்கு அனுப்பி அரசின் செலவினங்களை மிச்சப்படுத்துவதாகக் காட்டிக்கொண்ட எலான் மஸ்க் மறுபுறம் தனது சொந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் சுமார் 10000 கோடி ரூபாயை ஒரே இரவில் பனாலாக்கினார்.

இந்த நிலையில் தனது தொழிலில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் அரசு வழங்கிய அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்து சமீபத்தில் வெளியேறிய மஸ்க், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இதனால் டிரம்ப் – மஸ்க் இடையேயான வார்த்தை மோதல் அதிகரித்துள்ள நிலையில் கையெழுத்து வரி மற்றும் செலவு மசோதாவை எம்.பி.க்கள் படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக கருத்து தெரிவித்து அதிபர் டிரம்ப்புதன் எலான் மஸ்க் உச்சகட்ட மோதலில் இறங்கியுள்ளார்.
மஸ்க்-கின் இந்த பேச்சுக்களால் அதிபர் டிரம்ப் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் தனது நிர்வாகத்தில் இடமளிக்கப்பட்டதால் மசோதாவைப் பற்றி எலான் மஸ்க் முழுமையாக அறிந்திருந்தார் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.