கொடைக்கானலில் இன்று வானில் வட்டமடித்த போர் விமானங்களால், பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு தொற்றியது.
கொடைக்கானலில் தற்போது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடந்து வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை கிராமங்களில் விமானம் பறப்பது போன்ற சத்தம் கேட்டது. உடனே காட்டேஜ், விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளும் வீடுகளில் இருந்த பொதுமக்களும் வெளியே ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது போர் ஒத்திகையில் ஈடுபடும் விமானங்கள் வானில் பறந்து சென்றதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 20 நிமிடம் கொடைக்கானல் நகரிலும், மலை கிராமங்களிலும் வட்டமடித்த அந்த விமானங்கள் பின்னர் மறைந்தது. கொடைக்கானல் மலை கிராமங்களில் நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி போலீஸ் சோதனை நடத்தப்படும். மேலும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலுக்கு வரும் போது ஒருவித பதட்டமான சூழல் உருவாகும்.
இந்நிலையில் இன்று கொடைக்கானலில் பறந்த போர் விமானங்களால் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது அவர்களும் தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.