டேராடூன்,
வந்தே மாதரம் பாடுவதாக இருந்தால் இரு, இல்லையென்றால் மாநிலத்திலிருந்து வெளியேறிவிடு என உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத் என பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் இந்துத்துவ சக்திகளும், மத அடிப்படை வாதிகளும் தங்கள் கருத்துகளை பிறர் மீது வலிந்து திணிக்க முயற்சித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் வந்தே மாதரம் பிரச்னையை பாஜவினர் மீண்டும் கிளறிவிட்டுள்ளனர்.
அம்மாநிலத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் தான்சிங் ராவட், ரூர்கியிலிருக்கும் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பள்ளி , கல்லூரிகளில் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் தேசியகீதம் பாடுவதற்கான நேரம் என வரையறுக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் மாணவர்கள் வாழ விரும்பினால் வந்தே மாதரம் பாட வேண்டும், இல்லையென்றால் வெளியேறிவிட வேண்டும் என சர்ச்சையான கருத்தைப் பேசியுள்ளார்.
இவர் முன்னாள் ஆர் எஸ் எஸ் செயல்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.