கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அங்கு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாரதியஜனதா கட்சியும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

பாரதிய ஜனதா கட்சி தலைமை சேர குறிப்பிட்ட எண்ணை தெரிவித்து, பாரதியஜனதா கட்சியில் சேர இந்த எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுங்கள் என்று  மாநிலம் முழுவதும் பிரசாரங்களை மேற் கொண்டு வருகிறது.

இடதுசாரிகளின் கோட்டையாக அரை நூற்றாண்டு காலம் நீடித்து வந்த மேற்குவங்க மாநிலம் ஜோதிபாசு மறைவுக்கு பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாறியது. இங்கு பாரதியஜனதா காலூன்ற முயற்சி மேற்கொண்டு வந்தது.

42 லோக்சபா தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த  2014 லோக்சபா தேர்தலில்  2 தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதாவால் வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு (2019)  நடைபெற்ற லாக்சபா தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது.  இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டைகளுக்குள் புகுந்து பாரதிய ஜனதா  வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதன் வாக்கு சதவிகிதமும் அதிகரித்து உள்ளது. இடது சாரிகள் அடியோடு அழிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க மம்தா கட்சியும், பா.ஜ.கவும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

சரிந்து வரும் தனது கட்சியின்  வாக்கு வங்கியை உயர்த்தவும், தேர்தலில் பாஜகவை தோற்கடித்து வெற்றி வாகை சூடவும் பிரபல தேர்தல் வியூக சூத்திரதாரி பிரசாந்த் கிஷோருடன் மம்தா கை கோர்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாரதியஜனதா கட்சியும், தனது பங்குக்கு மிஸ்டுகால் கொடுத்து, உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வரும் பாஜக தற்போது  18002661001 மற்றும்  09220071112 எண்களுக்கும் மிஸ்டு கால் கொடுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறது.