கொல்கத்தா: குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த மாட்டேன், எனது ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
சட்டத்தை திரும்ப பெறக்கோரி அசாம், திரிபுரா மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அந்த மாநிலங்களில் அமைதியின்மை நிலவி வருகிறது.
டெல்லியிலும் அதன் தாக்கம் இருக்க, மாணவர்கள் போராடினர். 4 பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது.
இந் நிலையில் ஆட்சியே பறிபோனாலும் சரி, மேற்கு வங்கத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது ஆட்சியை கலைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களால் முடியும். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன்.
அதையும் தாண்டி அந்த சட்டத்தை அமல்படுத்த விரும்பினால், எனது சடலத்தின் மீது அதை செய்து பார்க்கப்படும் என்று ஆவேசமாக முழங்கி இருக்கிறார். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் மமதா பானர்ஜி அறிவித்து இருக்கிறார்.