மதுரை: 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நெல்லை பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 17ந்தேதி அன்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து. இந்த விபத்தில், அங்கு சிறுநீர் கழிக்க சென்ற 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இநத் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதுகறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த சோக சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று சாஃப்டர் பள்ளியின் பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இநத வழக்கின் விசாரணை முடிவடைந்து, இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை, பள்ளியில் உள்ள கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் இறந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்கு ரத்து செய்வதாக உத்தரவிட்டு உள்ளது.
மனுதாரர்கள் இரண்டு பேரும் விபத்து நடப்பதற்கு சில மாதத்துக்கு முன்புதான் அப்பள்ளியின் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் மூடியிருந்ததால், விபத்து நடைபெற்ற கட்டிடத்தில் உறுதித்தன்மை குறித்து அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியதுடன், தாளாளரும், தலைமை ஆசிரியையும் பதவியேற்புக்கு முன்னரே கழிவறை கட்டப்பட்டுள்ளதால், இந்த விபத்துக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.