உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்காக கடுமையாக போராடி வந்த தனியார் ராணுவ கம்பெனி வாக்னர் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியுள்ளது.
சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய கூலிப்படையாக வலம் வந்த வாக்னர் என்ற இந்த படைக்குழுவுக்கு எவஜெனி பிரிகோஜின் தலைமை தாங்கி வந்தார்.
2014 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தனியார் ராணுவ கம்பெனியில் தற்போது 10000 நிரந்தர வீரர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் 40000 சிறைக்கைதிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் வீரர்களுடன் போரிட தேவையான ராணுவ தளவாடங்களை ரஷ்ய ராணுவம் தங்களுக்கு வழங்காததால் வாக்னர் குழு வீரர்கள் பலியாக நேர்ந்ததாகக் கூறி ரஷ்ய ராணுவ தளபதிகள் மீது குற்றம் சாட்டிய பிரிகோஜின், வாக்னர் படைக்குழு உக்ரைனில் இருந்து பின் வாங்கப்போவதாகவும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைக்கப்போவதாகவும் நேற்று அறிவித்தார்.
வாக்னர் படைக்குழு தலைவர் பிரிகோஜினின் இந்த அறிவிப்பு தன்னை முதுகில் குத்தும் செயல் என்று வர்ணித்த புடின் இதற்காக பிரிகோஜின் வருத்தப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.
அதிபர் புடினின் க்ரெம்ளின் மாளிகை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் ராணுவத்தினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளுக்கான உணவு தயாரிப்பு ஒப்பந்தங்கள் அனைத்தும் பிரிகோஜினுக்கு வழங்கப்படுவதை அடுத்து புதினின் சமையல் கலைஞர் என்று அழைக்கப்பட்ட பிரிகோஜின் தற்போது புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் புடினின் நேரடி எச்சரிக்கையை அடுத்து கிளர்ச்சியை கைவிடப்போவதாக தன்னிடம் சமாதானம் பேசிய பெலாரஸ் அதிபரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவதுடன் அவர் பெலாரசில் தஞ்சமடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் வாக்னர் படையின் இந்த கிளர்ச்சி திட்டமிட்ட கிளர்ச்சி நடவடிக்கை என்றும் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்ய ரஷ்யா மேற்கொண்டுவரும் நாடகம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.