டில்லி

ரடங்கின் போது ஊதியம் அவசியம் வழங்க வேண்டும் என்னும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அனைத்து வர்த்தகம் மற்றும் தொழிலகங்கள் மூடப்பட்டன.  ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   இதையொட்டி அரசு கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அன்று ஒரு அரசாணை வெளியிட்டு ஊதியம் வழங்குவது அவசியம் என உத்தரவிட்டது.

அந்த அரசாணையில் 2005 ஆம் வருட பேரிடர் மேலாண்மை விதிகளை மேற்கோள் காட்டிய அரசு, “கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொழிலகங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் தங்களிடம் பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குறித்த தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.  இந்த ஊதியத்தில் நிறுவனம் மூடப்பட்டதற்காகவோ வேறு எதற்காகவோ பிடித்தம் இன்றி வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

அதையொட்டி அனைத்து நிறுவன நிர்வாகங்களும் ஊதியங்களை அளித்தது.  தற்போது ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வர்த்தகம் நடக்காமல் கடும் பொருள் இழப்பை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.  எனவே பல தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர் சங்கங்கள் ஊழியர்களுக்கு அளித்த ஊதியத்தை அரசு திரும்ப அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தற்போது நடந்து வரும் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்த வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.  அதில் ”ஊரடங்கு குறித்து அரசு வெளியிட்டுள்ள அனைத்து ஆணைகளும் மே மாதம் 18 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.    மார்ச் 29 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணை பற்றி இதில் குறிப்பிடவில்லை என்றாலும் புதிய ஆணைப்படி அதுவும் திரும்பப் பெறப்பட்டதாகி உள்ளது.

எனவே தற்போதைய நிலைப்படி ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஊதியம் அவசியம் வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றாகி உள்ளது.  இன்னும் முழுமையாக அனைத்து வர்த்தக மற்றும் தொழில் நடவடிக்கைகள் தொடங்கப்படாத நிலையில் அரசாணை திரும்பப் பெற்றது ஊழியர்களிடையே கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.