நாகர்கோவில்,

ரசு  ரப்பர் தோட்ட தொழிலாளர்களுடன் ஊதிய உயர்வு குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

அதையடுத்து,  வரும் 9ந்தேதி முதல் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும், முதல் கட்டமாக  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாக அரசு ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள்  கூறி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான ரப்பர் மரங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான எஸ்டேட்டுகளில் ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு அதில் இருந்த பால் உற்பத்தி செய்து ரப்பர் சீட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல அரசின் வனத்துறையினர்  பராமரித்து வரும் ரப்பர் தோட்டங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது. இங்கு சுமார் 3,500 தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் பலமுறை வலியுறுத்திய பிறகு, ஊதிய உயர்வு குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால்  பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து வருகிற ஒன்பதாம் தேதி முதல் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த தொழிற்சங்கத்தினர் முடிவு செய்து உள்ளதாக தொழிலாளர்கள் அறிவித்து உள்ளனர்.

தற்போது ஊதிய உயர்வு காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் போராட்டம் அறிவித்திருப்பது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.