சென்னை: வட சென்னை பகுதியான முக்கிய வழியான வியாசர்பாடி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்து இருப்பதாகவும், நிலம் கையப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடசென்னையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று வியாசர்பாடி கணேசபுரம். இது வியாசர்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை போன்ற இடங்களுக்கு செல்லும் ஒரு முக்கிய பகுதியாகும். இங்குள்ள ரயில்வே பாலத்தில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதால் வாகன போக்குவரத்து முழுமையாக தடைபடும். இதனால் வடசென்னை மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, வியாபார்பாடி கணேசபுரம் பகுதியில், புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என கூறிய திமுக அரசு, அதற்கான நடவடிக்கை எடுத்து, பணிகளும் தொடங்கியது. இதனால், அந்த சாலை முழுமையாக மூடப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலப் பணிகள் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. வடசென்னை மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக அவதிப்பட்டு வருகின்றன. வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கணேசபுரம் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை வடசென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், பணிகள் தாமதமாவதால், போக்குவரத்து சிக்கல்கள் தொடர்ந்து நிலவுகின்றன. கணேசபுரம் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டால், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி கல்யாணபுரம் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டியுள்ளது. கணேசபுரம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் மூலகொத்தளம் சந்திப்பு போன்ற சந்திப்புகள் வடசென்னையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இதையடுத்து, கணேசபுரம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், சென்னை மாநகராட்சி மேயரிடம் அண்மையில் மனு அளித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், டி.கே.சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் , கணேசபுரம் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி முடிவுற்று. தற்போது வடக்கு பகுதியில் ஆழ்துளைக் கடைக்கால்கள் அமைக்கும் பணி, சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்களை மாற்றியமைக்கும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. வடக்கு பகுதியில் நில எடுப்புக்கு பின்னரே அந்நிலத்தில், சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். எனவே, நில எடுப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்துக்குள் இம்மேம்பாலப் பணி முடிக்கப்படும்.
இவ்வாறு பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நில எடுப்பு பணிகளை எவ்வளவு துரிதப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு துரிதப்படுத்தி மேம்பாலப் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.