சென்னை:
சிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த சசிகலா நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது விடுதலையை அமமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் சிலர் பேனர் வைத்து வரவேற்றனர். சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் இளையமகனான ஓ பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெய பிரதீப், “பெங்களூருவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக்கொள்கிறேன். (இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல, என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு) இப்படிக்கு அம்மாவின் உண்மைத் தொண்டர் வி.ப. ஜெயபிரதீப்” எனக் குறிப்பிட்டுள்ளார்.