ஃபுளோரிடா: சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, நாசா அனுப்பிய வாயேஜர்-2 என்ற விண்கலம், தனது பயணத்தின் ஒரு கட்டமாக, சூரியக் குடும்ப எல்லையைக் கடந்து, இன்டர்ஸ்டெல்லார் என்ற பகுதியை அடைந்துள்ளதாக நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விண்கலத்தை நாசா அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னதாக அல்ல. கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி. அதாவது 42 ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது தனது பயணத்தைத் தொடங்கிய இந்த விண்கலம், ‍1800 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து, சூரியக் குடும்ப எல்லையைத் தாண்டி, தற்போது இண்டர்ஸ்டெல்லார்’ என்ற பகுதியில் நுழைந்து தனது பயணத்தைத் தொடர்கிறதாம்.

இந்தப் பகுதி என்பது, நட்சத்திரங்களுக்கு இடையிலனா அண்டவெளிப் பகுதி. இங்க‍ே, அண்டவெளி கதிர்வீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்கள் போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

‘இன்டர்ஸ்டெல்லார்’ பகுதியைக் கடந்துசென்ற இரண்டாவது விண்கலமாகும் இது. ஏனெனில், கடந்த 2012ம் ஆண்டு நாசாவின் ‘வாயேஜர் 1’ விண்கலம் அப்பகுதியை அடைந்தது குறிப்பிடத்தக்கது. ‘வாயேஜர் 2’ விண்கலத்திலிருந்து பூமிக்கான தகவல் வந்துசேர சராசரியாக 16 மணிநேரங்கள் மற்றும் 40 நிமிடங்கள் ஆவதாக நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.