வாஷிங்டன்

ன்று அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின்மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அமெரிக்க நாட்டில் அதிபரைத் தகுதி நீக்கம் செய்யப்படும் முறை impeachment (இம்பீச்மெண்ட்) என்று அழைக்கப்படுகிறது.  இம்பீச் மெண்ட் என்பது குற்றம் செய்த அரசியல் தலைவர்களைத் தண்டிக்கும் பொருட்டு கொண்டு வரப்படும் தீர்மானம் ஆகும்.   தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இரண்டிலும் வெற்றி பெற்றால், டிரம்ப் தனது பதவியை இழக்க நேரிடும்.

இந்த தீர்மானம் கொண்டு வர நிறையக் காரணங்கள் உள்ளன.   அவற்றுள்   டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார் எனவும்  சட்டங்களை வளைத்து, தனக்கு வேண்டியதைச் செய்கிறார், என்றும் ஒரு பக்கம் புகார் வைக்கப்படுகிறது. அதே வேளையில்  ரஷ்யாதான் டிரம்பிற்காக தேர்தலின் போது நிறைய முறைகேடுகளைச் செய்தது என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுகிறார் எனவும்  உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராகச் சதி செய்யப் பேரம் பேசி இருக்கிறார் எனவும் பலர் புகார்கள் எழுப்பி  உள்ளனர். இந்த புகார்களும் முக்கிய  காரணம் ஆகும்.

அது மட்டுமின்றி ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை ஊதிய விதிகளை டிரம்ப் மீறுகிறார்,  வெளிநாட்டு ஒப்பந்தங்களை மீறி டிரம்ப் நடந்து கொள்கிறார்,  வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறி, போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். எனவும் பல புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க அனுமதி அளித்து அந்த விசாரணை முடிந்துள்ளது. இன்று டிரம்ப் பதவி நீக்கம் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

அமெரிக்க நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது.  அந்த அவையில்  ஜனநாயக கட்சிக்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர்.  அமெரிக்க   அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள்.  ஆகையால் பிரதிநிதிகள் சபையில் கண்டிப்பாக டிரம்ப் தோல்வி அடைவார் எனவும் அவருக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறும் எனவும் கூறப்படுகிறது..

ஆனால் அதன்பின் இந்த வாக்கெடுப்பு செனட் சபையில் நடக்கும். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர்.   அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் வாக்கு தேவை என்பதால் அங்கு டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்படுவது சந்தேகமாகவும், செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.