நாகர்கோவில்: குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு காரணமாக, அங்கு ஜனவரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்சந்தை பகுதியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதா தகவல்கள் பரவின. இதையடுத்து, அங்க காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட அரசியல் கட்சியினர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தைக்கு கொண்டு வரப்ட்டு, அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
அந்த இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வேறு இடத்திற்கு எடுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். திட்டமிட்டே அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களைக் கடத்தியதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர் .