புதுடெல்லி: பிள்ளைகளை ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகளுக்கு யார் அனுப்புவார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். மாறாக, உங்கள் பிள்ளைகளை அயோத்தியாவுக்கோ, கும்பமேளாவுக்கோ அனுப்பி வைப்போருக்கு வாக்களிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார் ஜிக்னேஷ் மேவானி.
குஜராத் மாநிலத்தின் இளம் தலித் தலைவரும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான அவர், கிழக்கு டெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதிஷியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கையில் இவ்வாறு பேசினார்.
இந்து – முஸ்லீம் பிரிவினைவாத அரசியல் செய்வதற்காக, பிரதமர் நரேந்திரமோடி, ஏழைக் குழந்தைகளை அயோத்தியாவுக்கு அனுப்ப விரும்புகிறார்.
நமது அடுத்த தலைமுறைகளை நாம் அனுப்ப வேண்டிய இடம் ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் ஆகிய இடங்களே. நமது வேட்பாளர் ஆதிஷியும் அங்கு படித்தவர்தான்.
கல்வித்துறையில் இவர் செய்த சேவைகள் முன்மாதிரியானவை. அதுபோன்ற முன்மாதிரிகளை குஜராத்தில் எங்குமே காண முடியாது” என்றார்.
கோரக்பூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துகொண்டிருந்த குழந்தைகளை, தன் சொந்த முயற்சியால் காப்பாற்ற முயன்றதற்காக தண்டிக்கப்பட்ட மருத்துவர் கஃபீல் கானும், டெல்லி நிசாமுதீன் பகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.