சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், கட்சி பேதமின்றி வாக்காளர்களுக்கு பணப்பட்டவாடா நடைபெற்று வருகிறது. அதுபோல, திமுக,  அதிமுக இரு கட்சி வேட்பாளர்களின் உறவினர்களிடம் இருந்தும் ஏரளமான பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் பணப்பட்டுவாடா  செய்ததை தடுக்க பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும்,  அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் கடுமையான தேர்தல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.  ஆட்சி தக்க வைத்துக்கொள்ள அதிமுக போராடி வருகிறது.  திமுக எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கிடையில், கட்சி பேதமின்றி, திமுக, அதிமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக எம்.வெங்கடாசலம்  நண்பர் வீட்டிலிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வெடியரசம்பாளையம் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடத்தி வருமானவரித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் திருவண்ணாமலை ஆரணி அருகே வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் குமாரிடம் இருந்து ரூ. 3.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மாமண்டூர் திருவள்ளூர் பகுதியில் ரோந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை துறைமுகம் பகுதியில், திமுக சார்பில் சேகர்பாபு போட்டியிடுகிறார். அவர் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை  தடுத்த அநத் பகுதியைச் சேர்ந்த  பாஜக பிரமுகர் சரத் என்பவரை, 3 பேர் கொண்ட மர்மக்கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சரத் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உள்பட பல பகுதிகளில், மெயின் தெருக்களை தவிர்த்து உள்பகுதிகளில் கட்சி பேதமின்றி திமுக, அதிமுக ஆகியகட்சிகள் ரூ.200 முதல் ரூ.1000 வரை வாக்குக்கு பணம் கொடுத்து வருகின்றன. அதை மக்கள் வாக்கி வைத்துக்கொண்டு, இரு கட்சிகளுக்கும் தங்களது வாக்குகளை போடுவதாக கூறி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு,  தமிழக சட்டமன்ற  தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்புக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, 1950 என்ற எண்ணில் மாவட்ட அளவிலான தேர்தல் அலுவலர்களையும் 1800 4252 1950 என்ற எண்ணில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், சி விஜில் செல்போன் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்