உக்ரைன்:
ரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 5 நாட்களாக நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளையும் பொருட்டபடுத்தாமல், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய படைகள் உடனடியாக தங்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக இணைக்க வேண்டும். சிறப்பு விதிகளின் கீழ் உக்ரைனை இணைப்பது ஐரோப்பிய யூனியனுக்கு ஒன்றும் சிரமமாக இருக்காது. ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம். இன்றைக்கு உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும்” என செலன்ஸ்கி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த இணைவு மூலம் ராணுவ உதவி, நிதி என பல விதமான உதவிகளை உக்ரைன், ஐரோப்பிய யூனியனில் இருந்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.