டில்லி

ந்தியாவில் தங்கள் நிலை மோசமாக இருந்தாலும் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என வோடபோன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தொடர்ந்து பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன.   முதலில் ஐ யு சி பிரச்சினை வந்தது   அது முடிவதற்குள் அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமக் கட்டண நிலுவையை அபராதம் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.     ஏற்கனவே கடன் பிரச்சினைகளில் உள்ள பல தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.

பிரிட்டனின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்தியாவில் சேவை செய்து வருகிறது.   கடன் சுமை காரணமாக அந்நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் சேர்ந்து சேவையைத் தொடர்ந்து வருகிறது.   இந்நிலையில் இந்தியாவில் வோடபோன் நிறுவனம் சேவையைத் தொடராது எனப் பல தகவல்கள் தெரிவித்தன.   ஆனால் வோடபோன் நிர்வாக தலைமை அதிகாரி இதை மறுத்துள்ளார்.

வோடபோன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீட், “நாங்கள் இப்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பது உண்மைதான்.   இந்தியாவில் எங்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.  ஆனால் நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வந்த செய்திகள் உண்மை இல்லை.   எந்தவொரு கடன் அளிப்பவரிடமும் கடன் மறுசீரமைப்பிற்கான எந்தவொரு கோரிக்கையும் நாங்கள் அளிக்கவில்லை.

நாங்கள் கட்டண விதிமுறைகளையும் சீரமைக்கக் கோரவில்லை. அத்துடன் எங்களது கடன்களை நாங்கள் கட்டிக் கொண்டு வருகிறோம்.   அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி வெளியேறுவோம்?   நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்னும் தகவல் ஆதாரமற்றது ஆகும்.  இத்தகவலில் உண்மையும் இல்லை மேலும் இது தவறான தகவல்” எனத் தெரிவித்துள்ளார்.