தேநீர் கவிதைகள் – 3

வியாபாரத் தேநீர்

பா. தேவிமயில் குமார்

முப்பத்தஞ்சு வயசாச்சு
மூணு முடி விழுவதெப்போ ? என
உறவுகள் கேட்கையில்
உடைந்துதான் போகிறேன் !

இரண்டாம் தாரமோ
மூன்றாம் தாரமோ
முதலில் இவள்
வெளியே போகட்டும் என
வேதனைக் குரல்கள் !

அடிமைச் சந்தையில்
ஏலம் விடப்படுகிறேன்
ஒப்பனையிட்டு
அமரும் ஒவ்வொரு முறையும் !

விருந்தோம்பல் தேநீரை
வியாபாரிகள் போல
பருகியவாறே….
பவுன் எவ்வளவு தேறும் என்று
பேச்சுக்கள், பல காலமாய்
பரிசீலிக்கப்படுகிறது !

கோவிலின் சிலையும்
நானும்….
நகர்வதாக இல்லை
இருந்த இடத்தைவிட்டு என
ஏளனப் பேச்சுக்கள் !

குடியிருக்கும் குடிசை வீட்டை
கல்யாணத்திற்காக
விலை காட்டுகின்றனர் !

மூக்குத்தியும், கம்மலும்
மட்டுமாவது
போட்டனுப்ப
பேச்சுக்கள் நடக்கிறது !

ஒவ்வொரு முறையும்
வேற இடம் பார்க்கலாம்னு
வேதனைக் குரல்கள்
வலியுடன்….

விக்கித்து நிற்கும்
அப்பன் !
பாவி இவ நேரமோ என்று
புலம்பிடும் அம்மா !

துஷ்யந்தனைக் காணாமலே
தவிக்கிறேன்,
மதுரை வீரனைப் பார்க்காமலே
மயங்குகிறேன் கனவுகளில் !

காசுபணம் இருக்கவங்க
கல்யாணம் கட்டிக்கட்டும் !

ஏழைப் பெண்கள்
அப்பன் வீட்டிலேயே
என்றென்றும்
இளவரசிகளாக
இருந்து விடுகிறோம் !
திருமணம் எதற்கு ? என
தினம் தினம் யோசிக்கிறேன் !

இப்படிக்கு
திருமணமே வேண்டாத
தேயாத வெள்ளி நிலவுகள் !