சிம்லா :
இமாச்சலபிரதேசத்தில்சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 7ந்தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது
68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இமாச்சலிலி தற்போது வீரபத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் போராடுகிறது.
இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலுமே காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக போட்டியிடுகின்றன. தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 62 பேர் உட்பட 337 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தற்போதைய முதலமைச்சர் வீர்பத்ர சிங், அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள 10 பேர் , முன்னாள் முதலமைச்சர் பிரேம்குமார் தூமல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ள நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலில் 19 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 6 பேர் பாரதிய ஜனதா சார்பிலும், 3 பேர் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
தற்போது இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்எல்ஏக்களும், பாரதிய ஜனதாவுக்கு 28 எம்எல்ஏக்களும் உள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்காக 7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 50 லட்சத்து 25 ஆயிரத்து 941 வாக்காளர் உள்ளனர்.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் முதன்முறையாக இமாச்சலப் பிரதேச தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இமாச்சலபிரதேசத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அங்கு ஆட்சியை பிடிக்க பாரதியஜனதாவும் தீவிர பிரசாரம் செய்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இநத் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாஜகவுக்கு சாதகமாக அமையுமா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்.
வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (டிசம்பர்) 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.