வேலூர்,

வேலூர் காட்பாடி அருகே உள்ளது விஐடி பல்கலைக்கழகம். இந்த நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் நடத்தி வருகிறார்.

இந்த பல்கலைக்கழகத்தின் பின்புறம் கல்குவாரி உள்ளது. ஏற்கனவே கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

சம்பவத்தன்று இந்த குவாரி குட்டை பகுதிக்கு பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் அரிக்குமார், பிரவீன், சித்தார்த் மற்றும் பிரீத் ஆகிய 4 மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கல்லூரி பின்புறம் உள்ள  ஈசன் ஓடை பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி குட்டை பகுதிக்கு சென்றனர்.

அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது ஒருவருக்கொருவர் முகத்தில் கேக் பூசியதால் அதை கழுவ குட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்துள்ளார் ஒரு மாணவர். பின்னர் அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்த மற்ற 2 மாணவர்களும் அடுத்தடுத்து  மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தப்பித்த ஒரு மாணவர் உடடினயாக பல்கலைக்கழகத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து  வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மாணவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சோக சம்பவம் குறித்து உயிர்தப்பிய  மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த மாணவன் பீரீத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.