கொல்கத்தா: பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்வதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 3 மாதமாக இரு இனத்தவரிடையே வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு திணறி வருகிறது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பி, அவைகளை முடக்கி வருகின்றன. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா அமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு மணிப்பூர் சென்று ஆய்வு நடத்த உள்ளது. இதில்   திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் உட்பட 2 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தை எதிர்கொள்வது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஜாதி, மத அடிப்படையில் மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதற்கு பாஜக சதி செய்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  பாஜக ஆட்சி செய்யும்,  மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என  வலியுறுத்தியவர்,  பிரதமர் மோடியை மணிப்பூருக்கு செல்லுங்கள் என பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்த வேண்டும் என்றார்.  தாம் மணிப்பூர் மாநிலம் செல்வதற்கு அனுமதி கேட்டதாகவும் ஆனால் மணிப்பூர் மாநில நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டினார்.