சென்னை
சென்னையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் 237 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,40,300 ஆகி உள்ளது. அதில் 8,345 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,29,907 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 2,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையொட்டி சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “சென்னையில் இதுவரை 60 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அரசின் தடையை மீறி நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.