நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள விஷால் அணியினர் கடந்த ஒரு வருடத்தில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும் இது குறித்து கேள்வி எழுப்பிய தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி தெரிவித்துள்ளார்.
இது குறித்த வாராகியின் பேட்டி நேற்று patrikai.com இதழில் வெளியானது. இந்த விவகாரம் குறித்து வாராகி மேலும் தெரிவித்ததாவது:
“நடிகர் சங்க நிர்வாகிகளாக நாசர், விஷால், கார்த்தி பொறுப்பேற்றதும், கட்டட நிதிக்காக, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. அதே போல சங்க இடத்தில் கட்டிடம் கட்ட ஒப்பந்த உரிமை அளிக்கப்பட்டதிலும் மோசடி நடந்திருக்கிறது.
வெளிப்படையான நிர்வாகம் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே, பழைய நிர்வாகிகளை எதிர்த்து, விஷால் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். ஆனால், இவர்களும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.
இதுகுறித்து, மார்ச், 23ம் தேதி சங்கத்திற்கும், சங்க பதிவாளருக்கும் கடிதம் அனுப்பினேன். பின் ஏப்ரல், 7ம் தேதியும், இறுதியாக ஆகஸ்டு 7ம் தேதியும் புகார் கடிதம் அனுப்பினேன். இனியும் மேலும் உரிய பதில் தராவிட்டால், சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என, தெரிவித்தேன்.
இதையடுத்து நிர்வாகக் குழு கூட்டத்திற்கு வரும் படியும், அங்கே புகார் குறித்து விளக்கம் தரப்படும் என்றும், நடிகர் சங்கத்திலிருந்து கடிதம் வந்தது. அதன்படி, நேற்று சங்க அலுவலகத்திற்கு சென்றேன்.
அங்கே, விஷால், கார்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் யாரும் இல்லை. அங்கே இருந்த கும்பல், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இதுகுறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று வாராகி தெரிவித்தார்.