குண்டூர்
திருமலை தேவஸ்தான நில அபகரிப்பை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடரப் போவதாக விசாகப்பட்டினம் மடாதிபதி சொரூபானந்த சாமிகள் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா மடத்தின் மடாதிபதி சொரூபானந்த சாமிகள். நேற்று குண்டூரில் உள்ள பத்மாவதி ஆண்டாள் சமேத வெங்கடேஸ்வர சாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் ஸ்ரீ சாரதா பீட மடாதிபதி சொரூபானந்த சாமியும் கலந்துக் கொண்டார்.
செய்தியாளர்களிடம் சொரூபானந்த சாமி, ”பலர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிலங்களை அபகரித்தும், ஆக்கிரமித்தும் வருகின்றனர். ஆந்திராவில் இதேபோன்ற ஊழல் அதிகரித்து விட்டது. அதை ஒட்டி நான் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெற ராஜ சியாமளா யாகம் நடத்த உள்ளேன். நான் தெலங்கானாவில் மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க வேண்டுமென சமீபத்தில் இதே யாகம் செய்தேன். அதனால்தான் அவர் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.
ஆந்திராவில் திருமலை திருப்பதி தேவஸ்தான நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. இது குறித்து விரைவில் வெளி உலகிற்கு தெரிவிப்பேன். அத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதை ஆந்திர அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இது குறித்து தேவஸ்தானம் மீதும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு தொடர உள்ளேன்”என தெரிவித்துள்ளார்.