ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதை அடுத்து வெளிநாட்டினரின் விசா கோரிக்கைகள் மறுசீராய்வு செய்யப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் கடந்த ஜூன் மாதம் விதிக்கப்பட்ட பயணத் தடையில் இடம்பெற்றிருந்தது.
ஆப்கானிஸ்தான், மியான்மார் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினி, எரிட்ரியா, ஹெய்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
புருண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு பகுதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களின் அனைத்து விசா விண்ணப்பங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அவர்களின் விவரங்கள் மீண்டும் முழுமையாக ஆய்வு செய்யப்படும், தேவையானால் புதிய நேர்முகப் பேட்டி கூட நடைபெறும் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை அடுத்து விசா தொடர்பான நேர்முகம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.