மதுரை: விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், ரவுடிகளும், காவல்துறையினரும், வழக்கறிஞர்களும் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்படும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், மார்ச் 19ந்தேதி மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த 19-ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒருவரது சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் விருதுநகரைச் சேர்ந்த காவலர் மலையரசன் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வசிரணை நடத்திய காவல்துறையினர், காவலர் கலையரசனை ஒரு கும்பல் கொலை செய்து எரித்துள்ளது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மூவேந்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காவலர் மலையரசன் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்து எரித்ததாக மூவேந்தர் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது, காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
இதில் காலில் காயமடைந்த மூவேந்தர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் கொடுத்த தகவலின்படி, மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், காவலர் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான வில்லாபுரம் ஹவுசிங்போர்டு சேர்ந்த சிவா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.