விருதுநகர்: விருதுநகர் பர்மா கடை நிறுவனர் வேலுசாமி கொரோனாவுக்கு பலியாகி உள்ளது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் என்றாலே நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று தான் எண்ணெய் புரோட்டாவும், சிக்கன் சாப்ஸ்சும். அதை சாப்பிட்டவர்களுக்கே அதன் தனிச்சுவை தெரியும்.
விருதுநகரில் எண்ணெய் புரோட்டாவிற்கும், சிக்கன் சாப்ஸ்சுக்கும் மிகச்சிறந்த உணவகம் பர்மா கடை. 40 வருடங்களாக சிறந்த முறையில் பர்மா கடை உணவகத்தை நடத்தி வருகின்றனர். விருதுநகர் வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள் பர்மா கடையின் ருசியை கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்.
அத்தகைய புகழ்மிக்க உணவகத்தின் நிறுவனர் வேலுசாமி கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 74. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அவரது மகன் வெற்றி வேல் கூறியதாவது; பர்மாவில் இருந்து தமது 12 வயதில் அவர் தமிழகத்துக்கு வந்தார். சென்னையில் தொடக்க காலத்தில் சுமை தூக்கும் தொழிலாளி, சரக்கு வேன்ஓட்டுநர் என வேலை செய்து வந்தார்.
பிறகு, 1967ம் ஆண்டு விருதுநகர் வந்து ஒரு சின்ன கடையை அமைத்தார். பின்னர் முத்துராமன்பட்டியில் பர்மா உணவகத்தை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சிறிய கடையாக சைவ உணவுகளை வழங்கினார். விரைவில் அசைவ உணவகமாக மாறியது என்றார்.
எந்தவொரு வணிகத்துக்காக விருதுநகர் நகரத்திற்கு வருபவர்கள் பர்மா கடையின் வறுத்த பரோட்டாக்களை சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள் என்கிறார் உள்ளூர்வாசியான மகேந்திரன். மதுரை சாலையில் நவீன தோற்றத்துடன் கூடிய அவரது உணவகம், மதுரை-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் நீண்ட தூர பயணிகளை ஈர்க்கும். மேலும் ஒரு உணவகம் சமீபத்தில் கல்லிகுடியில் திறக்கப்பட்டது. மறைந்த வேலுசாமிக்கு மனைவி விஜயகவுரி, 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.