விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 6-ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. இந்த கோவிலில் உள்ள அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் இருந்த 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் வேளையில், சிவன்கோவிலில் கோபுர கலசங்கள் திருடப்பட்டு உள்ள சம்பவம் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட 3 கலசங்களும் 3 அடி உயரமுடையவை என்றும் ஒவ்வொரு கலவசத்தின் மீது 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, அந்த கலசங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவிலில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.