மும்பை: கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனைகளை, விராத் கோலி இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகளில் முறியடிப்பார் என்று ஆரூடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரட் லீ.
சச்சின் டெண்டுல்கர், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் அடித்து, மொத்தம் 100 சதங்களை அடித்த சாதனையாளராக திகழ்கிறார்.
அதேசமயம், தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலி, மொத்தமாக 70 சதங்களை இதுவரை அடித்துள்ளார். (ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள்).
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரட்லீ, “சச்சினின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனில், திறமை, உடற்தகுதி மற்றும் மனோவலிமை போன்றவை அவசியம். கோலியிடம் திறமைக்குப் பஞ்சமில்லை.
இவர் தனது உடற்தகுதியில் தொடர்ந்து கவனம் செலுத்தக்கூடியவர். அதேசமயத்தில், இவர் தனது மனவலிமையையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கடினமான போட்டிகள் மற்றும் அதிக நாட்கள் வீட்டைவிட்டு வெளியில் இருத்தல் போன்றவை அதற்கு உதவும்.
சூழல்கள் அனைத்தும் சாதகமாக அமைந்தால், விராத் கோலி, அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் சச்சினின் சாதனையை முறியடிக்கலாம்” என்றார் அவர்.