டி20 உலகக்கோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி தனிமனித சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும் பாதுகாப்பற்ற அச்சவுணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெர்த்தில் உள்ள கிரவுன் ஹோட்டலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கோலியின் படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் வைக்கப்பட்டிருந்த அவரது தனிப்பட்ட பொருட்களை நெருக்கமான காட்சி காட்டுகிறது.

சுவர் அருகே வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டிருக்கும் காலணிகள் மற்றும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் மற்றும் கோலியின் ஜெர்சி உள்ளிட்ட துணிகள் அடங்கிய சூட்கேஸ் ஆகியவற்றை படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பற்றி அறிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் அதனால் அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் இந்த வீடியோ எனது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதோடு எனக்கு பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தூண்டியுள்ளது என்று விராட் கோலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருப்பு ஷூ, சாம்பல் நிற பேண்ட், வெள்ளை நிற ஷர்ட் அணிந்து இரண்டு அல்லது மூன்று நபர்கள் அந்த வீடியோவை எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஞாயிறன்று நடைபெற்ற போட்டியின் போது தங்கியிருந்த பெர்த் கிரவுன் ஹோட்டல் ஊழியர்கள் அணிந்திருந்த சீருடை போல் இருந்ததை அடுத்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த கிரவுன் ஹோட்டல் செய்தி தொடர்பாளர், “இது தங்கள் ஹோட்டலில் பணிபுரியும் துப்பரவு ஊழியர் ஒருவர் எடுத்த வீடியோ என்றும்

இதற்காக நாங்கள் கோலியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.