மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்புவது, இந்திய அணியில் நிச்சயம் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.
தனக்கு முதல் குழந்தைப் பிறக்கப்போவதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புகிறார் கோலி. அவருக்கு பதிலாக, அடுத்த 3 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பேற்கிறார் ரகானே.
இதுகுறித்து டெண்டுல்கர் கூறியுள்ளதாவது, “கோலி போன்ற ஒரு வீரர் அணியில் இல்லாமல் இருப்பது நிச்சயம் வெற்றிடத்தை உருவாக்கும்தான். ஆனால், அதன்மூலம் இளம் வீரர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.
அதேசமயம், இதை ஒரு தனிப்பட்ட நபர் சார்ந்த விஷயமாகப் பார்க்கக்கூடாது. ஒரு அணி என்ற முறையிலேயே பார்க்க வேண்டும். இந்திய அணியில் பல நல்ல திறமையுள்ள இளம் வீரர்கள் தற்போது உள்ளனர். எனவே, விராத் கோலியின் இடத்தில் அவர்கள் சிறப்பாக செயல்படுவர்” என்றுள்ளார் டெண்டுல்கர்.
மேலும், தற்போதைய ஆஸ்திரேலிய அணி, அதிக வலுவுடன் திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.