மும்பை: ஆஸ்திரேலியாவின் எந்த மைதானத்திலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய மண்ணில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு அழைப்பு விடுப்போம் என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவின் எந்த மைதானத்திலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தயாரென்றும், மைதானம் குறித்து கவலையில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிக்கு இடையே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டிதான், டெஸ்ட் உலகின் முதல் பகலிரவு போட்டியாகும். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணி பகலிரவு டெஸ்ட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சொந்த மண்ணில் தான் பங்கேற்ற 7 பகலிரவு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடிய பகலிரவு டெஸ்ட் போட்டிதான், இந்திய அணிக்கான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும்.