பேரலி:
உ.பி. மாநிலத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு என்று பிரத்யேக வழித்தடம் அமைக்க மாநில அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்திலும் விவிஐபி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது.
கடந்த 15ம் தேதி மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சதாகன்ட், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘மத்திய அரசின் வழிகாட்டுதல் படி உ.பி சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில், ‘‘அனைத்து சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில் எம்பி, எம்.எல்.ஏ.,க்களுக்கு என்று பிரத்யேக வழித்தடம் அமைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு புறம் விவிஐபி கலாச்சாரத்தை ஒழிக்கிறோம் என்று கூறி கார்களில் உள்ள சிகப்பு சுழல் விளக்குகளை அகற்றும் பணி நடந்தது. ஆனால், தற்போது வேறு வழியில் விஐபி கலாச்சாரம் மீண்டும் தலை தூக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், ‘‘இந்த புதிய உத்தரவு சுங்கச்சாவடியை நிர்வாகம் செய்பவர்களு க்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே பல இடங்களில் எம்எல்ஏ.க்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி பல தருணங்களில் சுங்கச் சாவடிகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளது’’ என்றார்.
மேலும், ‘‘ ஒரு எம்.பி., ஒரு எம்.எல்.ஏ. காருடன் குறைந்தபட்சம் 5 வாகனங்கள் செல்லும். இந்த வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து தான் செல்ல வேண்டும். ஒரு வாகனத்திற்கு மட்டுமே சுங்கச்சாவடியில் விலக்கு அளிக்கப்படும்.
இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால், இதர வாகனங்களில் வருவோரும் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயற்சிப்பார்கள். இதனால் வன்முறை சம்பவம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கும். இது போன்ற அனுபவங்கள் ஏற்கனவே உள்ளது’’ என்றார்.
பாஜ எம்எல்ஏ மகேந்திர யாதம் கடந்த மே மாதம் பிலிபித்தில் உள்ள சுங்கச் சாவடியை கடந்து சென்றார். அவருடை ஆதரவாளர்கள் வந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கேட்டபோது வன்முறை வெடித்தது. சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக தான் தற்போது பிரத்யே வழித்தடம் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.