திருமலை:
திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசிக்க வழங்கப்பட்டு வரும் விஐபி டிக்கெட் விலையை ரூ.20ஆயிரமாக உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விஐபி தரிசனத்துக்கு வரும் கூட்டத்தினரையும் கட்டுப்படுத்தும் நோக்கிலும், ஆலயத்திற்கு வருமானத்தை கூட்டும் வகையிலும், புதிய கட்டணமாக ரூ.20ஆயிரம் ரூபாய் நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு வி.ஐ.பி தரிசன டிக்கெட்டின் விலையையும் ரூ. 20,000 என நிர்ணயிக்க டி.டி.டி தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஐபி டிக்கெட்டுகளை வழங்குவதற்காக ஒரு கவுண்டர் பிரத்தியேகமாக அமைக்கப்படும் என்று தேவஸ்தான வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த டிக்கெட் பெறுபவர்கள், சாதாரண மக்களுக்கு முன்னால் அனுமதிக்கப்படுவார்கள், மேலும் கருவறைக்குள் மிக நெருக்கமான பகுதிகளிலிருந்து (குலசேகர ஆல்வார் பாடியிலிருந்து) வெங்கடேஷ்வர பெருமானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே ,‘நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது. இதற்காக புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட் (The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த டிரட்டுக்கு ரூ.20ஆயிரம் நன்கொடை அளித்தால், ஒரு விஐபி டிக்கெட் இலவசம் என்ற முறை அறிவிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய கட்டணத் திட்டம் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.