டில்லி:

மதத்தின் பெயரில் நடக்கும் வன்முறைகளை நியாயப்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு இஸ்லாமிய வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இறந்தவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் அதை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் போப்தே, நாகேஸ்வரராவ் ஆகியோர்

இன்று விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், ‘‘பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடு என்பதை நீதித்துறை மனதில் கொள்ள வேண்டும். அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதிக்க கூடாது. மதம் அல்லது ஜாதியின் பெயரால் எந்தவிதமான வன்முறைகளையும் நியாயப்படுத்தக் கூடாது’’ என்றனர்.

4 பேருக்கும் ஜாமீன் வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். அதோடு,‘‘கொலை வழக்கில் ஜாமீன் வழங்கும்போது எவ்விதமான புறம்பான காரணங்களை கருத்தில் கொள்ளாமல் சட்டப்பூர்வமாகவும், நேர்மையான முறையிலும் உத்தரவு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.