சென்னை: சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ சட்டமன்ற அலுவலகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் பகுதியை உடனே இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்தை உருவாக்குபவர்களே அதை மீறுவதா என கண்டித்துள்ளது.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த அரவிந்த் ரமேஷ் இருந்து வருகிறார். அவருக்கு சட்டமன்ற அலுவலகம் மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டித்தில் தற்போது மேலும் பகுதிகள், மாநகராட்சி அனுமதியின்றி, விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில், விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதை தடுக்க வேண்டும என கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், 15வது மண்டல அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால், மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜரான சென்னை மாநகராட்சி வழக்கறிஞர், தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், எம்எல்ஏவின் சொந்தச் செலவில் கூட்ட அரங்கை கட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்த விவகாரத்தில், அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கண்டனம் தெரிவித்துடன், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என கண்டித்தார்.
மேலும், அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டுவரும் கட்டுமானத்தை இடிப்பதற்குத் தேவையான தகுந்தநடவடிக்கைகளை உடனே எடுக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
விதிகளை மீறி திமுக எம்எல்ஏவே கட்டிடம் கட்டியதையும், அதை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிகழ்வுகளும் பரபரப்பை ஏற்படுத்திஉ ள்ளது.