சென்னை:
ஊரடங்கு கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சென்னையில் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து கண்டறியும் ரோந்து பணியில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழு ஈடுபட்டுள்ளனர். மண்டலத்திற்கு 1 குழு வீதம் 15 குழுக்களாக செயல்பட்டு வந்தது அதனை தற்போது மண்டலத்திற்கு 3 குழுக்கள் வீதம் 45 குழுவாக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
மண்டல வாரியாக செயல்படும் ஊரடங்கு அமலாக்க குழுவை ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்றாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் இந்த குழுவை விழிப்புணர்வு தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்த உள்ளோம்.
பொதுமக்கள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்து, மாநகராட்சி அலுவலர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊரடங்கு கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் முதல் முறை எச்சரிக்கப்படுவர், இரண்டாம் முறை ஊரடங்கை மீறும் பட்சசத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி செய்துயாளர்களிடம் பேசியதாவது.
கடந்த மாதத்தில் சென்னையில் முகக்கவசம் அணியாத 11,105 நபர்களுக்கு அரபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாத 2548 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தானாக முன்வந்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.