சென்னை:
காரைக்காலைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசி கொன்ற சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது.
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு தீபாவளியைக் கொண்டாடிவிட்டு தனது சொந்த ஊரான காரைக்காலில் இருந்து சென்னை திரும்ப பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசியதில், அவர் பார்வையிழந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், வினோதினி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து, வினோதினியின் உறவினர் காரைக்கால் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுரேஷ் மேல் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி சுரேஷின் ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் நேற்று உறுதி செய்தது.