விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் அமைந்துள்ளது.

“மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் சிலையை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டது. பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு நிறுவப்பட்டது.” – இது தலவரலாறு.

இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.

அழகிய கோபுரம், மாடங்கள், மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில். இத்திருக்கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூசை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் செலவுகளான தினப்படி பூசைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.

விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து வளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவையன்றி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

சிதறு தேங்காய் போடுதல்,கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பால் அபிடேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்குப் பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திக்கடன்களாக செய்கிறார்கள்.

[youtube-feed feed=1]