லக்னோ
தாஜ்மகால் சிவன் கோயில்தான் என பாஜக எம் பி வினய் கட்டியார் கூறி உள்ளார்.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. இதைக் காண உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். சமீபத்தில் உ பி அரசின் சுற்றுலாத்துறை கையேட்டில் தாஜ்மகால் பெயர் விடுபட்டிருந்தது. அதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆட்சேபித்தனர்.
அந்த சர்ச்சை ஓய்வதற்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சாம் தாஜ்மகாலை கட்டியது துரோகி எனக்கூறி அடுத்த பரப்பரப்பை ஏற்படுத்தினார். அதற்கு உபி முதல்வர் யோகி “தாஜ்மகால் இந்தியத் தொழிலாளர்கள் வியர்வை சிந்திக் கட்டியது. அதை மதிக்கிறோம். தாஜ்மகாலுக்கு வரும் பயணிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்” எனக் கூறி இந்த பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.
தற்போது பாஜக வின் மாநிலங்கள் அவை உறுப்பினர் வினய் கட்டியார் அடுத்த சர்ச்சையை தனது கருத்தின் மூலம் உருவாக்கி உள்ளார். அவர், “தாஜ்மகால் முதலில் சிவன் கோவிலாக இருந்து வந்துள்ளது. அதனால் அதன் பழைய பெயரான தேஜோ மகால் என்னும் பெயரை சூட்ட வேண்டும். அந்தக் கட்டிடத்தில் பல இந்து மதக் குறியீடுகள் உள்ளன. இதைக் கண்டறிய உ பி முதல்வர் யோகி உடனடியாக தாஜ்மகால் செல்ல வேண்டும்.
தாஜ்மகால் கல்லறை எனச் சொல்பவர்கள் ஒரு கல்லறைக்குள் இத்தனை அறைகள் எதற்கு என்பதை தெளிவு செய்ய வேண்டும். நான் இந்த கட்டிடத்தை இடிக்கச் சொல்லவில்லை. முகலாய அரசர்கள் தான் இந்த சிவன் கோயிலை இடித்து கல்லறை கட்டி உள்ளனர். நான் விரும்புவதெல்லாம் பெயர் மாற்றாம் மட்டுமே. ஆங்கிலேயர்கள் கூட நமது எந்தக் கட்டிடத்தையும் இடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது” எனக் கூறி உள்ளார்.
இது போல பல பிரிவினர் தேஜோமகால் என்னும் இந்த ஆலயம் முகலாய மன்னன் ஷாஜஹானுக்கு அங்குள்ள அரசர் பரிசளித்ததாகவும், அதை சீர்திருத்தி தாஜ்மகாலை அவர் அமைத்ததாகவும் கூறி வருகின்றனர். மற்றும் சிலர் ஆலயத்தை அவர் கைப்பற்றி அதை இடித்து கல்லறை கட்டியதாக கூறி வருகின்றனர். ஆனால் இவர்களின் எந்த ஒரு வாதத்துக்கும் ஆதாரங்கள் எதுவும் தரப்படவில்லை.