விழுப்புரம்:
டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் கடந்த 23-ம் தேதி அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “பழனிசாமி கம்பெனி காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்கிறது. இங்கு ஒருவர் இருக்கிறார். உண்மையைச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது. நமது இலக்கு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதுதான். இந்தத் தொகுதியில் ரூ.200 கோடியைப் பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களைத் தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்.

இன்றைக்கு பழனிசாமி கம்பெனியினர், திமுகவினரைத் தாக்கியும், திமுகவினர் பழனிசாமி கம்பெனியைத் தாக்கியும் பேசி வருகிறார்கள். ஆனால், 2 பேரையும் தாக்கிப் பேசக்கூடிய ஒரே சக்தி அமமுகவுக்குத்தான் இருக்கிறது. பழனிசாமி கம்பெனி ஆட்சிக்கு வரப்போவதில்லை. எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வீட்டுக்கு வீடு 6,000 ரூபாய், 10,000 ரூபாய் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டார்கள். அதுபோல், இங்கு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கலாம் என்று முதலில் நினைத்தார்கள். இப்போது பயம் வந்து ஆர்.கே.நகர் மாதிரி 6,000 ரூபாய் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்.  திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி பேசுவார்கள், ஆளும்கட்சியாக இருக்கும்போது மாறி விடுவார்கள். உங்களை ஏமாற்றவே பழனிசாமியும், ஸ்டாலினும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். இருவருமே ஆட்சிக்கு வரப்போவதில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சமுதாய மக்களும் சமூக நீதியும், சம உரிமையும் பெறச் செய்வோம்” எனப் பேசினார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல், முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சரை இழிவாகப் பேசியதாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக இன்று (மார்ச் 29) புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீஸார், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், உள்நோக்கத்துடன் குறைசொல்லி பேசுதல், அவதூறு பரப்புதல், அவமதித்து பேசுதல், தேர்தல் சம்பந்தமாக பகையை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.