விழுப்புரம்:  மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா இன்று சென்னை வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட பாஜக  மகளிரணி பொதுச்செயலாளர் காயத்திரி, பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன். அதே மாவட்டத்தில்  பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் காயத்திரி.  இவர் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர். இவரிடம் கலியவரதன் பலமுறை மிரட்டல் விடுத்தும், பாலியல் தொலை மற்றும் பணமோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த காயத்திரி, இதுதொடர்பாக பாஜக மாநில தலைமையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், மாநில தலைமை கண்டுகொள்ளாததால், கலியவரதன் மீது  பாலியல் புகார், பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பாஜக தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் கடிதத்தில், “நான் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ளேன். எனக்கு மாவட்ட தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார். என்னைப் போன்று பல பெண்களின் வாழ்க்கையில் அவர் விளையாடுகிறார். எனவே, அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம்  பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வரும் வேளையில், பாஜக பெண் தலைவரின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.